ஆஸ்திரேலியாவில் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத நண்டு


ஆஸ்திரேலியாவில் மீனவர் வலையில் சிக்கிய ராட்சத நண்டு லண்டன் அருங்காட்சியகத்துக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது. ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவு பகுதியில் மீனவர் வலையில் ‘கிளாட்’ வகையை சேர்ந்த ராட்சத நண்டு கடந்த மாதம் சிக்கியது. ஆஸ்திரேலியாவில் எந்த வகை நண்டு கிடைத்தாலும் உடனே சட்டிக்குதான் போகும். ஓட்டல்கள், விடுதிகளில் அமோக விளம்பரத்துடன் நண்டுக் கறிகள் விற்பனையாகும்.


ஆனால், பிடித்த மீனவர் அதை கறிக்கு விற்காமல் பத்திரமாக வைத்திருந்தார். கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் ‘ஸீ லைஃப்’ என்ற அமைப்பு இதை ரூ.2.58 லட்சம் கொடுத்து அவரிடம் இருந்து வாங்கியிருக்கிறது. இது இங்கிலாந்தின் டார்செட் கவுன்டியில் உள்ள வேமோத் ஸீ லைஃப் அருங்காட்சியகத்தில் வைக்கப்படுகிறது. இதற்காக, 10 அடி உயரம், 6 அடி அகலத்துக்கு பிரத்யேக கண்ணாடி பெட்டி தயார் செய்து, அதில் நண்டை போட்டு விமானத்தில் லண்டனுக்கு எடுத்து சென்றுள்ளனர். இது கூடவே டாஸ்மேனியா தீவு பகுதியில் பிடிபட்ட மற்ற 2 நண்டுகளில் ஒன்று பர்மிங்காமுக்கும் மற்றொன்று பெர்லினுக்கும் அனுப்பப்பட உள்ளன.

இதுபற்றி ஸீ லைஃப் அமைப்பின் அதிகாரி ராப் ஹிக்ஸ் கூறியதாவது: டாஸ்மேனியா பகுதியில் ‘கிளாட்’ வகையை சேர்ந்த ராட்சத நண்டுகள் அதிக எண்ணிக்கையில் இருந்தன. அங்கு நண்டு உணவும் பிரசித்தம். இதுபோன்ற காரணங்களால் இவற்றின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. தற்போது பிடிபட்டிருக்கும் ராட்சத நண்டு சுமார் 6.8 கிலோ எடை, 15 இன்ச் நீளம் இருக்கிறது. வழக்கமான கடல் நண்டு போல 100 மடங்கு பெரிது. இது இன்னும் வளரும். முழுதாக வளரும் பட்சத்தில் இதன் எடை 14 கிலோ வரை இருக்கும். ஜப்பானின் ஸ்பைடர் வகை நண்டுக்கு அடுத்தபடியாக, உலகிலேயே 2,வது பெரிய நண்டு கிளாட்தான். இறால், சிறிய வகை நண்டு, சிப்பி மீன் ஆகியவற்றை இது விரும்பி உண்ணும்.

பிடிபட்ட இரையை நொறுக்கி உண்ணும் வகையில் மிகப் பெரிய கொடுக்குகள் இதற்கு இருக்கின்றன. இது தவிர அதிக சக்தி கொண்ட சிறிய கொடுக்குகளும் உண்டு. கொடுக்கு மட்டுமே 3.5 இன்ச் நீளம் உள்ளவை. உடைந்தால் மீண்டும் வளரும். உணவை அரைக்கும் பற்கள், இதன் வயிற்று பகுதியில் இருக்கும். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான முட்டைகள் இடும் என்றாலும் பெரும்பாலானவை இதர கடல்வாழ் உயிரினங்களுக்கு உணவாகிவிடும். இதனால், ஒன்றிரண்டு மட்டுமே முழு வளர்ச்சி அடையும். இதன் முழு ஆயுட்காலம் 20 ஆண்டுகள். ஆஸ்திரேலியாவில் இருந்து விமானத்தில் 29 மணி நேரம் பயணித்து இங்கிலாந்துக்கு வந்திருக்கிறது. அதிக நேர விமான பயணத்தால் ஏற்படும் ‘ஜெட்,லேக்’ காரணமாக சில நாட்கள் சரியாக சாப்பிடாமல் இருந்தது. இப்போது, வழக்கம்போல சாப்பிட ஆரம்பித்துவிட்டது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India