தவறான திசையில் ஓடியதால் தங்கத்தை இழந்த ஒலிம்பிக் வீரர்

ஒலிம்பிக் காய்ச்சல் இப்போதே அடிக்கத் தொடங்கி விட்டது. ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் சுவாரஷ்யமான நிகழ்வுகள் இடம்பெறாமலில்லை. அதில் ஒன்றே பின்வரும் நிகழ்வாகும்.

தவறான திசையில் ஓடி ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை இழந்த பரிதாபத்திற்குரியவர் இத்தாலியின் டொரன்டோ பிட்ரி ஆவார். மிகச் சிறந்த மரதனோட்ட வீரரான பிட்ரி 1908ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற நான்காவது ஒலிம்பிக் போட்டியில் இந்தத் துரதிர்ஷ்ட சம்பவத்திற்கு முகம் கொடுத்தார்.

1908.07.24ஆம் திகதி பகல் 2.33 மணிக்கு 4ஆவது ஒலிம்பிக் போட்டியின் மரதன் ஓட்டப் போட்டி லண்டனில் ஆரம்பமானது. அன்றைய தினம் வழக்கத்தை விட லண்டன் நகரை வெயில் கொளுத்தியது. இதனால் போட்டியை மெதுவாக ஆரம்பித்த பிட்ரி கடைசி நேரத்தில் தனது வேகத்தை அதிகரித்து ஏனைய வீரர்களை பின்னுக்குத் தள்ளினார். இதனால் போட்டியை நிறைவு செய்வதற்கு பிட்ரி முதல் வீரராக ஒலிம்பிக் அரங்கிற்குள் நுழைந்தார். ஆனாலும் களைப்பு மிகுதியால் அவருக்கு தலைகால் புரியவில்லை. போட்டியை முடிப்பதற்கான எல்லைக்கோட்டுக்கு எதிர்த்திசையில் ஓட ஆரம்பித்தார் பிட்ரி. எனினும் அங்கிருந்த மத்தியஸ்தர் பிட்ரிக்கு சரியான திசையைக் காட்ட, சுதாகரித்துக் கொண்ட பிட்ரி வெற்றி எல்லையை நோக்கி ஓட ஆரம்பித்தார். இந்நிலையில் களைப்பு மிகுதியால் அவர் நான்கு தடவைகள் வெற்றி எல்லையை அடைவதற்கு முன்னர் தரையில் விழுந்து விட்டார். இதன்போது மத்தியஸ்தர் ஒவ்வொரு முறையும் அவரைத் தூக்கி விட்டு தொடர்ந்து ஓட உதவினார்.

எவ்வாறோ டொரன்டோ பிட்ரி ஒலிம்பிக் மரதன் ஓட்டப் போட்டியை முதல் வீரராக முடித்து தங்கப் பதக்கத்தை வெல்லத் தகுதி பெற்றார். இதன்போது அவர் 42.195 கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட மரதன் ஓட்டத்தை முடித்தார்.

இந்நிலையிலேயே அமெரிக்கா குழப்பத்தைக் கிளறியது. பிட்ரி மரதன் போட்டியை மத்தியஸ்தரின் உதவியுடனேயே முடித்தார் என்று ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவிடம் முறையிட்டது. இதனை விசாரித்த ஏற்பாட்டுக் குழு பிட்ரி போட்டியில் தகுதியிழந்து விட்டதாக அறிவித்தது. இதனால் போட்டியில் இரண்டாவதாக வந்த அமெரிக்காவின் ஜொன்னி ஹெய்சுக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது.

இந்நிலையில் பிட்ரி போட்டியில் இருந்து நீக்கப்பட்டது சர்வதேச அளவில் விமர்சனத்திற்குள்ளானது. இதனாலேயே அவர் சர்வதேச அளவில் புகழ் பெற்றார். தங்கப் பதக்கத்தை பரிதாபமாக இழந்த பிட்ரிக்கு பிரித்தானிய அரச குடும்பத்தால் விசேட விருது வழங்கப்பட்டது. அத்துடன் அப்போதிருந்த புகழ் பெற்ற இசையமைப்பாளர் இர்வின் பெர்லின் பிட்ரிக்காக விசேட பாடல் ஒன்றையே வெளியிட்டார். இது மட்டுமல்லாது இத்தாலி அரசு பிட்ரியின் பெயரில் முத்திரை ஒன்றை வெளியிட்டுக் கௌரவித்தது.

1885 ஒக்டோபர் 16ஆம் திகதி மட்ரியோவில் பிறந்த பிட்ரி 1942ஆம் ஆண்டு பெப்ரவரி 7ஆம் திகதி தனது 56ஆவது வயதில் காலமானார்.



0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India