சென்னையில் 18 வருட காலண்டரை துல்லியமாக சொல்லி அசத்தும் அதிசய சிறுவன்

width="200"

கண் முன்னால் கிடக்கும் காலண்டரில் தேதி, நாள் பார்ப்பதில் கூட  குழப்பம் ஏற்படும்.  சில விநாடி யோசனைக்கு பிறகுதான் சரியான முடிவுக்கு வர முடிகிறது.  
 
ஆனால் 2030-ம் ஆண்டில் ஒரு மாதத்தையும், தேதியையும் சொன்னால் கிழமையை துல்லியமாக சொல்கிறான் 10 வயது சிறுவன். அதெப்படி...? என்று யோசிக்கிறீர்களா? அவனுடைய அற்புத ஆற்றலை பார்த்து எல்லோருமே அதிசயித்து போகிறார்கள்.  
 
ஸ்ரீராம் பாலாஜி! இவன்தான் அந்த அதிசய சிறுவன். அடையாறு ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். படிப்பில் படுசுட்டி என்று சொல்ல முடியாதவர். வகுப்பில் அமைதியானவன், கடுமையான உழைப்பாளி. இதுதான் அவனைப்பற்றி ஆசிரியை லதா கூறும் சுருக்கமான தகவல்.
 
அவனது அதிசய ஆற்றலை கண்டுபிடித்தது பற்றி ஆசிரியை லதா கூறியதாவது:-  
 
வகுப்பில் ஒருநாள் வியாழக்கிழமை என்ன தேதி என்று பார் என்றேன். ஆனால் அவன் காலண்டரை பார்க்காமலேயே தேதியை சொன்னான். உடனே அடுத்த வாரம் வியாழக்கிழமை என்ன தேதி என்றேன். அதையும் சரியாக சொன்னான். இந்த வருடத்தில் எத்தனை வியாழக்கிழமை என்றேன். அதற்கும் சளைக்காமல் பதில் சொன்னான். நமக்கு தெரியாததை அவன் சொன்னதும் எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.  
 
உடனே அவனது பெற்றோரிடம் தொடர்பு கொண்டு விசாரித்தோம். அதற்கு அவர்கள் கூறும் போது, எப்போதும் செல்போனில் காலண்டர் பார்ப்பான் அவ்வளவுதான் என்றார்கள். அவனது ஆற்றலை சோதிப்பதற்காக நாங்கள் பல ஆண்டு காலண்டரை இன்டர்நெட்டில் படியிறக்கம் செய்து வைத்துக் கொண்டு அவனிடம் ஏதாவது ஒரு ஆண்டு, மாதம் தேதியை சொல்லி கிழமையை கேட்போம்.
 
அதற்கு சரியான பதில் சொல்வான்.   2030-ம் ஆண்டு வரை எந்த தேதியை சொன்னாலும் துல்லியமாக சொல்லி விடுகிறான். பல தடவை ஒரு புத்தகத்தை புரட்டினால் அந்த புத்தகத்தின் பக்கங்கள் மிகவும் அரிதாக சிலருக்கு போட்டோ போல் நினைவுக்கு வரும். இந்த மாதிரி நினைவாற்றலை ஐடிடிக் நினைவாற்றல் என்கிறார்கள். அவனை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
ஸ்ரீராம் பாலாஜியின் தந்தை வேலுசாமி. தாயார் ஜீவப்பிரியா. சொந்த ஊர் அரியலூர். இப்போது வேளச்சேரியில் வசிக்கிறார்கள். வேலுசாமி டைல்ஸ் வியாபாரம் செய்து வருகிறார்.



0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India