நொக்கியாவை பேஸ்புக் கொள்வனவு செய்யவுள்ளதா? _
பேஸ்புக் பெயரிலான கையடக்கத்தொலைபேசி தொடர்பான செய்தி தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டுவருகின்றது.
இது தொடர்பாக சில வருடங்களுக்கு முன்னரே செய்திகள் அடிபட்ட போதிலும் அவை நிஜமாகவில்லை.
இந்நிலையில் தற்போதும் பேஸ்புக் கையடக்கத்தொலைபேசி தொடர்பாக பலராலும் பேசப்பட்டுவருகின்றது.
சிறப்பான மொபைல் பேஸ்புக் அனுபவத்தினைத் தரும் வகையில் தனது பெயரிலேயே கையடக்கத்தொலைபேசி தயாரிக்கும் நோக்குடன் அப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் சிலரைப் பணிக்கமர்த்தியுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதேபோல தற்போதும் சுவாரஸ்யமான செய்தியொன்று வெளியாகியுள்ளது.
சந்தையில் தனது இடத்தினைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவரும் நொக்கியாவினை பேஸ்புக் கொள்வனவு செய்யவுள்ளதாகவும் அதனுடன் இணைந்து பேஸ்புக் கையடக்கத்தொலைபேசி தயாரிக்கவுள்ளதாகவுமே செய்திகள் வெளியாகியுள்ளன.
சுமார் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு நொக்கியாவைப் பேஸ்புக் விலைபேசியுள்ளதாகவும், நொக்கியாவின் அனுபவம் மற்றும் சிறப்புத்தேர்ச்சியை பேஸ்புக் உபயோகிக்கவுள்ளதாகவும் தெரியவருகின்றது.
நொக்கியா மைக்ரோசொப்ட்டுடன் சிறந்த உறவினைப் பேணிவருவதனால் பேஸ்புக் பேரிலே விண்டோஸ் கையடக்கத்தொலைபேசி ஒன்றினைப் பேஸ்புக் தயாரிக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகமாகவுள்ளன.
கையடக்கத்தொலைபேசி ஊடாகப் பேஸ்புக் பாவனை அதிகரித்து வருகின்றமையால் அவற்றில் காட்சிப்படுத்தும் விளம்பரங்களின் எண்ணிக்கை குறைவாகும். இவ்விடயம் தொடர்பில் பேஸ்புக் பாரிய சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளது. மேலும் பேஸ்புக்கின் பங்குச்சந்தைப் பிரவேசம் சறுக்கியது நாம் அறிந்த விடயமே.
இவற்றிலிருந்து மீளவும் வருவாய் தரக்கூடிய மார்க்கங்களை அதிகரிப்பதுவும் தற்போது பேஸ்புக்கின் முக்கிய குறிக்கோள்களாக உள்ளதுடன் அதற்கான மாற்று வியூகங்களை வகுப்பதும் காலத்தின் கட்டாயமாகவுள்ளது.
இத்தகைய காரணிகளைக் கருத்தில்கொள்ளும் போது பேஸ்புக் தனது பெயரிலான கையடக்கத்தொலைபேசியைத் தயாரிப்பதும், அதற்கென உறுதியான பங்காளரொருவருடன் கைகோர்ப்பதும் சாத்தியப்படக்கூடிய விடயங்களாகவே தெரிகின்றன.
பேஸ்புக்கிற்கு என்றுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே அதன் கையடக்கத்தொலைபேசிக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனாலும் நொக்கியா போன்றதொரு நிறுவனத்தினை அவ்வளவு இலகுவாகக் கொள்வனவு செய்ய முடியுமா என்பது சற்று சந்தேகத்துக்குரிய விடயமே!
0 comments:
Post a Comment