பிரிட்டனின் ஹாம்ப்ஷையர் மாகாணத்திலுள்ள ஓவர்டோன் நகரில் வசித்து வருபவர் நிக்கோலஸ் கிரேஸ். இவருக்கு வயது 83. லண்டலின் உள்ள பொது நல அறக்கட்டளை ஒன்றின் இயக்குனராக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். இந்த வயதில் இவரது ஒரு சிறுநீரகத்தை தானம் செய்துள்ளார்.
லண்டன் மருத்துவ உலகில் சிறுநீரக தானம் செய்தவர்களில் மிகவும் அதிக வயதுடையவர் என்ற பெருமையை நிக்கோலஸ் பெற்றிருக்கிறார். இவரது மனைவி இறந்துபோன பிறகு, பொதுவாழ்க்கைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார் நிக்கோலஸ்.
செப்டம்பர் 2011 - ற்குப் பிறகு சிறுநீரக தானம் செய்வது குறித்து மிகவும் தீவிரமாக யோசித்து வந்ததாக கூறும் நிக்கோலஸ் இருதினங்களுக்கு முன்பு தனது சிறுநீரகத்தை தானம் செய்துள்ளார்.
போர்ட்ஸ் மவுத் பகுதியிலுள்ள அலெக்ஸாண்டிரியா மருத்துவமனையில் வைத்து இவரது சிறுநீரகம் ஆபரேஷன் மூலம் எடுக்கப்பட்டது. 3 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆபரேஷன் முடிவில், மருத்துவர் ஒருவர் கூறியதாவது ''நிக்கோலஸின் இந்த மனப்பான்மையை பாராட்ட வார்த்தைகளே இல்லை. 83 வயதுடைய அவரது சிறுநீரகம் 40 வயதுடையவரின் சிறுநீரகத்தைப் போல ஆரோக்கியமாக இயங்குகிறது'' என்றார்.
இதுகுறித்து நிக்கோலஸ் கிரேஸ் டெலிகிராப் பத்திரிகையாளரிடம் கூறியதாவது:
ஆண்டிற்கு 7000 ஆயிரம் பேர் மாற்று சிறுநீரகத்திற்காக காத்திருக்கின்றனர். சிறுநீரகத்திற்காக காத்திருந்தாலும், மாற்று சிறுநீரகம் கிடைக்காமல் போவதால் தினமும் ஒருவர் உயிரிழக்கிறார்.
வயதான காலத்தில் இப்படி ஒரு தானம் செய்ய என்னால் முடிந்ததே என்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன். என் உடலில் இருக்கும் ஒரு பாகத்தை தானம் செய்வதால் என் உடலில் சிறுமாற்றம்தான் ஏற்படும். ஆனால் எனது பாகத்தை தானமாகப் பெறுபவரின் வாழ்க்கையில் அது ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்பதே, நான் சிறுநீரக தானம் செய்வதற்கு தூண்டு கோலாக இருந்தது.
இந்த வயதான காலத்திலும் அடுத்தவருக்கு உதவியாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இவரது வாழ்நாளில் இதுவரை 57 முறை ரத்ததானம் செய்துள்ளார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
மரணத்திற்குப் பிறகு மண்ணோ, நெருப்போ சாப்பிடும் இந்த உடலின் பாகங்களை, உயிருடன் இருக்கும் போதே மற்றவருக்கு தானமாக வழங்கிய நிக்கோலஸ் கிரேஸ் மிகவும் உயர்ந்த மனிதர் என்பதில் துளியும் சந்தேகமே இல்லை.
0 comments:
Post a Comment