ஜப்பானில் நீர்வாழ் பிராணிகளுக்கான உயிரியல் பூங்கா ஒன்று டோக்கியோவில் செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவிலிருந்து தப்பித்துச் சென்ற பென்குயின் இரண்டு மாத தேடுதல் வேட்டைக்குப் பிறகு பிடிபட்டுள்ளது.
ஹம்போல்ட் ரகத்தைச் சேர்ந்த இந்த ஒரு வயது பென்குயின், தன்னைவிட இரண்டு மடங்கு உயரமான ஒரு சுவற்றைத் தாண்டி இந்த பூங்காவிலிருந்து தப்பிச் சென்றது. அருகிலுள்ள ஆற்றில் குதித்த பென்குயின் ஆற்றிலேயே சுதந்திரமாக இருந்துள்ளது.
இந்த ஆற்றில் பென்குயின் இருப்பதை கண்டவர்கள் பூங்கா நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து பென்குயினைப் பிடிக்க பூங்கா நிர்வாகம் தனது ஊழியர்களை அனுப்பியது. ஜப்பான் கடலோரக் காவல் படையினரும் அப்பணியில் ஈடுபட்டனர்.
ஒரு சமயம் காவல் படையினர் அப்பென்குயினை பிடித்துவிடும் தூரத்தில் வந்தும், அது அவர்கள் கைகளில் சிக்காமல் தப்பியோடிவிட்டது. இருமாதங்களுக்குப் பிறகு, அதே ஆற்றில் சுற்றித் திரிந்த பென்குயின் பூங்காவின் ஊழியர்களின் கைகளில் சிக்கிக் கொண்டது.
பென்குயின் உடல்நலத்தை பரிசோதித்த பூங்கா ஊழியர் ஒருவர் பென்குயின் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இருமாதங்களுக்கும் மேலாக பூங்கா ஊழியர்களுக்கு தண்ணி காட்டி வந்த பென்குயின் பிடிபட்டதை அடுத்து ஏராளமானோர் அப்பென்குயினை பார்வையிட்டு வருகிறார்களாம்.
0 comments:
Post a Comment