
இங்கிலாந்தில் உள்ள சவுகாம்டன் துறைமுகத்தில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு புறப்பட்டு சென்ற "டைட்டானிக்" என்ற பயணிகள் சொகுசு கப்பல் வடக்கு அட்லாண்டிக் கடலில் கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 15-ந் தேதி மூழ்கியது.
அந்த கப்பலில் 2224 பேர் பயணம் செய்தனர். அவர்களில் 1514 பேர் கப்பல் மூழ்கியதில் பலியாகினர். மற்றவர்கள் உயிர் காக்கும் உடைகள் மற்றும் அவசர கால படகுகள் மூலம் தப்பினர். முதல் பயணத்திலேயே டைட்டானிக் ஜல சமாதி ஆன சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. டைட்டானிக் கப்பல் மூழ்கி 100 ஆண்டுகள் ஆகிறது.
இதையொட்டி அந்த கப்பலுக்கும், கடலில் மூழ்கி பலியானவர்களுக்கும் நினைவு அஞ்சலி செலுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி டைட்டானிக் போன்ற வடிவமைக்கப்பட்ட பயணிகள் சொகுசு கப்பல் லண்டனில் கட்டப்பட்டுள்ளது. அந்த கப்பல் தனது பயணத்தை நேற்று தொடங்கியது.
டைட்டானிக் பயணத்தை தொடங்கிய அதே சவுகாம்டன் துறைமுகத்தில் இருந்து இக்கப்பலும் புறப்பட்டது. "எம்.எஸ்.பால் மோரல்" என்ற அந்த கப்பலில் 28 நாடுகளைச் சேர்ந்த 1309 பேர் பயணம் செய்கின்றனர். அவர்களில் டைட்டானிக் கப்பல் மூழ்கியதில் பலியானவர்களின் குடும்பத்தினரும், உயிர் தப்பியவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரும் உள்ளனர்.
அந்த கப்பலில் பயணம் செய்ய ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் முதல் ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் வரை டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது டைட்டானிக் கப்பல் சென்ற அதே வழிப்பாதையில் புறப்பட்டு செல்கிறது. இக்கப்பல், வருகிற ஏப்ரல் 14-ந் தேதி அன்று பனிப்பாறையில் மோதி டைட்டானிக் மூழ்கி கிடக்கும் கடல் பகுதியை சென்றடைகிறது.
அன்று நள்ளிரவு அது மூழ்கிய 11.40 மணிக்கு இக்கப்பலில் சென்றுள்ளவர்கள் மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்துகின்றனர். இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியாக கருதப்படுகிறது.
0 comments:
Post a Comment