செலவு தொகையை வசூலிப்பதற்காக விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகள் 6 மணி நேரம் சிறை வைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த இந்தியா வம்சா வழியினர் 180 பேர் விமானம் மூலம் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தனர்.
இந்த பயண ஏற்பாட்டை "ஸ்கை ஜெட்" என்ற நிறுவனம் செய்திருந்தது. அந்த நிறுவனம் தான் விமானத்தை வாடகைக்கு அமர்த்தி கொடுத்தது. அந்த விமானம் மூலம் இந்தியாவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அமிர்தசரஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளையும் சுற்றிப் பார்த்தனர். பின்னர் நேற்று முன்தினம் அவர்கள் தாய் நாட்டுக்கு புறப்பட்டனர். அந்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக ஆஸ்திரியாவின் வியன்னா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
அப்போது அந்த விமான நிறுவனத்தின் அதிகாரிகளிடம் இருந்து விமானத்தில் இருந்த ஊழியர்களுக்கு தகவல் வந்தது. இதையடுத்து பயணிகளுக்கு அந்த ஊழியர்கள் ஒலிபெருக்கி மூலம், தங்களது பயண ஏற்பாட்டாளர்கள், சுமார் 20 லட்சம் பாக்கி செலுத்த வேண்டியுள்ளது. அதை நீங்கள் எல்லோரும் சேர்ந்து கட்டினால் தான் தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டு பர்மிங்காம் செல்ல முடியும். இல்லையெனில் இங்கேயே இறங்கி விடப்படுவீர்கள் என்று அறிவித்தனர்.
இந்த அறிவிப்பை கேட்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள், பயண ஏற்பாட்டாளர்கள் செய்ததவறுக்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்? எங்களை சொந்த ஊரில் கொண்டு இறக்கி விடுங்கள் என்று மன்றாடினார்கள். ஆனால், விமானிகளும், ஊழியர்களும் கேட்பதாக இல்லை. ஓடு பாதையிலேயே 6 மணி நேரமாக விமானத்தை நிறுத்தி வைத்திருந்தனர். வேறு வழியின்றி ஏ.டி.எம். கார்டு வைத்திருந்தவர்கள் அருகில் உள்ள ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று பணத்தை எடுத்து வந்து கொடுத்தனர்.
அதன் பிறகே விமானம் அங்கிருந்து புறப்பட்டது. ஒருவழியாக பர்மிங்காம் வந்து பஸ் மூலம் அவரவர் வீடு போய்ச் சேர்ந்தனர். பயண ஏற்பாட்டாளர்கள் செய்த குளறுபடியால், அப்பாவி பயணிகள் 6 மணி நேரம் விமானத்தில் சிறை வைக்கப்பட்ட சம்பவம் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி ஆஸ்திரேலிய விமான நிறுவன அதிகாரி பூவிந்தர் கான்ட்ரா கூறுகையில்,
பயண ஏற்பாட்டை செய்த "ஸ்கை ஜெட்" நிறுவனம் சொன்னபடி பணத்தை தராமல் பாக்கி வைத்து விட்டது. முழுமையாக பணத்தை தந்து விடுவார்கள் என்று நம்பிதான் விமானத்தை இயக்க ஒப்புக் கொண்டோம். அவர்கள் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார்.
சுற்றுலா பயணிகளில் ஒருவரான ஏன்விர் தெஹால் கூறுகையில், பணத்தை தரவில்லை எனில் விமானத்தில் இருந்து அனைவரையும் இறங்கி விட்டு விடுவோம் என்று ஊழியர்கள் மிரட்டினர். மேலும் எங்களை விமான நிலையத்தை விட்டு வெளியே கொண்டு வருவதற்காக, வரிசையாக பஸ்களை நிறுத்தி வைத்திருந்தனர் என்று கண்கலங்கியபடி கூறினார்.
ஒரு கட்டத்தில் பயணிகள் ஆவேசம் அடைந்து ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டு பிரச்சினை முற்றிய உடன்தான் ஆஸ்திரிய போலீசார் தலையிட்டுள்ளனர். அதன் பிறகு, நிலைமை மாறி, ஒருவழியாக பணம் செட்டில் பண்ணப்பட்டு, விமானம் அங்கிருந்து கிளம்யுள்ளது. இந்த விவகாரம் உள்ளூர் நாளிதழ்களில் தலைப்பு செய்தியாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Paris Time


0 comments:
Post a Comment