உடல் எடையைக் குறைப்பதற்கான வழிகள்!


உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே நேரத்தில் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவினை உட்கொண்டாலே போதும் உடல் எடை குறையும்.

உடலில் இருந்து அதிக கலோரி சக்தி வெளிப்படக்கூடிய வகையில் உடற்பயிற்சி செய்யலாம் அல்லது மொத்த உணவில் உள்ள கலோரியின் அளவைக் குறைக்கலாம். இவை எல்லாமே சொல்வதற்கு மட்டும் தான் எளிது.

ஒருபுறம் டயட்டில் இருக்கிறேன் என்று கூறிக் கொண்டு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும்பட்சத்தில் உடல் குண்டுக்கு மேல் குண்டாக அதிகரித்துக் கொண்டே போகும்.

அமெரிக்காவில் சுமார் 64 சதவீதம் பேர் அதிக எடை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் 23 சதவீதம் பேர் மிகமிக குண்டான தோற்றம் கொண்டவர்கள் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

கனடாவைப் பொருத்தவரை 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் அதிக எடை கொண்டவர்களே. இங்கு 6 பேரில் ஒருவர் குண்டானவர்களாக இருக்கிறார்கள். இதிலிருந்து டயட், உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதெல்லாம் ஏட்டளவிற்குத்தான் என்பது தெளிவாகிறது.

ஆனால் நடைமுறைக்கேற்றவாறு அன்றாடம் உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியைக் கடைபிடித்தால், பாதுகாப்பான முறையிலும், நிரந்தரமாகவும் உடல் எடையைக் குறைக்க முடியும்.

அதற்கான சில வழிகள். பொதுவாக உடலில் நமக்குச் தேவையான அளவு கலோரியை விட அதிக அளவில் கொழுப்பு சேர்ந்தாலே உடல் குண்டாகத் தோற்றம் அளிக்கிறது. தேவைக்கு அதிகமான கொழுப்பு உடலில் தேங்கியிருப்பதை கரைத்தலே எடை குறைப்பாகும்.

குறைவாக சாப்பிடும்போது, உடலுக்குத் தேவையான சக்தியானது கொழுப்பின் மூலம் எரிந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதே நேரத்தில் நீங்கள் எந்தவகை உணவை சாப்பிடுகிறீர்கள் என்பதும் மிக முக்கியம்.

சாப்பிடும் உணவானது உங்களின் உடல் எடை குறைப்புத் திட்டத்திற்கு மையமாக அமைய வேண்டியது அவசியம். எடுத்துக்கொள்ளும் உணவு வகைகளினால் புற்றுநோய் போன்ற நோய்களில் இருந்து வாழ்நாள் முழுவதும் உங்களைப் பாதுகாக்க வேண்டியதும் அவசியம்.

மாமிசத்தில் அதிக அளவிலான கொழுப்பு உள்ளது. அதுவே பழ வகைகளில் குறைந்த கொழுப்பு உள்ளது. என்றாலும் குறுகிய கால உடல் எடை குறைப்புக்கு பழங்களை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

அதிக அளவில் மாமிசங்களை சாப்பிடுவதால் பல்வேறு வகையான நோய்கள் ஏற்படுகின்றன. அதே நேரத்தில் அதிக பழங்களைச் சாப்பிடுவதால் புற்றுநோயிலிருந்து தப்பிக்கிறீர்கள்.

பழங்கள், காய்கறிகள், முழுவதும் தானியங்களிலான உணவுகள், குறைவான கொழுப்பு கொண்ட பால் உற்பத்திப் பொருட்கள் மற்றும் புரோட்டீன் உணவுகளே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உகந்தவை.

எடையைக் குறைக்கும் தன்மை கொண்டவை. சில வகை உணவுகள் உங்களின் சக்தி தேவைக்கேற்ப இருப்பதுடன் உடனடியாக அதிக கொழுப்பை தருபவையாக அமைந்து விடலாம்.


கேக், கொழுப்பு நிறைந்த மாமிசம், பால், கிரீம், சாஸ் போன்றவற்றை அதிகமாக சேர்த்தல் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.

உடல் எடையைக் குறைப்பதற்காக சிலர் தடாலடியாக உணவினை குறைத்துக் கொண்டு, மெலிந்து பலவீனமான பின் மீண்டும் ஏற்கனவே இழந்ததற்கு மிச்சமாக அதிக அளவிலான உணவை எடுத்துக் கொள் வார்கள். இது தவறான அணுகுமுறை.

உடற்கூறு நிபுணர்கள் கருத்தின் படி, உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் படிப்படியாக எடையைக் குறைக்க முன்வர வேண்டும். பொதுவாக வாரம் ஒன்றுக்கு 450 கிராம் அளவிற்கே எடை குறைய வேண்டும். அப்போதுதான் உடலில் பாதிப்பு ஏற்படாது.

நாளொன்றுக்கு உங்களின் உணவு முறையில் சுமார் 500 கலோரி அளவுக்கு குறைவாக சாப்பிடுங்கள். இதன்மூலம் உடம்பில் ஏற்கனவே சேர்ந்திருக்கும் கொழுப்பில் இருந்து தேவையான கலோரிகள் அன் றாட சக்திக்காக எடுத்துக் கொள்ளப்படும். அல்லது 250 கலோரி குறைவாக சாப்பிடுவீர்களானால், 250 கலோரி அளவிற்கு உடற்பயிற்சி செய்தும் குறைக்க முடியும்.

குறைவான கலோரி சாப்பிடுவதுடன் உடற்பயிற்சியும் செய்வதால் குறையும் உடல் எடை நீடித்து நிரந்தரமாக இருக்கும். பாதிப்பும் ஏற்படாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

காலை உணவை கண்டிப்பாக சாப்பிடுங்கள். வெறும் வயிற்றில் இருந்தால் மதிய உணவின் போது அதிகம் சாப்பிடத் தூண்டும். அதே போல மதிய உணவைத் தவிர்க்காதீர்கள்.

குறிப்பிட்ட நேரத்தில் குறைந்த அளவாவது சாப்பிடுதல் வேண்டும். சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறைந்து விடும் என்று நினைப்பது அறியாமை.

உணவில் குறைவான கொழுப்புச் சத்துக்கள் உள்ளனவா என்பதை அறிந்து அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். திடஉணவின் அளவை குறையுங்கள். அதிக அளவில் திரவ உணவுகளை உட்கொள்ளுங்கள். குறிப்பாக தண்ணீர் அதிக அளவில் குடியுங்கள்.

உங்களுக்குப் பிடித்தமான உணவு வீட்டில் சமைத்திருந்தாலும் தேவைக்கு அதிகமாக சாப்பிட முடியவில்லையே என்று ஏமாற்றம் அடையாதீர்கள். உங்களின் உடல் எடை குறைகிறதா என்பதை குறிப்பிட்ட இடைவெளியில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

சாப்பிடாமல் இருந்து உடல் எடையைக் குறைக்கலாம் என்று கருதுவீர்களானால், அது உடல் பலவீனத்தையும், நோயையும் கொண்டு வந்து சேர்க்கும்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India