சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு நாம் பின்பற்றும் வழிமுறைகள்


திருமணத்துக்குப் பிறகு, அதற்கு முன்பிருந்த உறவுகளை சொல்லி அதனால் பிரச்சினைகள் உருவாவதை தவிர்த்து விடவேண்டும்.முன்பிருந்த காதல், பிரச்சினை, குழப்பங்களுக்கு வழி வகுத்துவிடும். ஆகவே அந்த மாதிரியான எண்ணங்களுக்கு முழுக்கு போட்டுவிடுங்கள். திருமணத்துக்கு பிறகும் முந்தைய சில உறவுகளைத் தொடர்ந்தால் அதுவே உங்கள் வாழ்க்கைக்கு எதிராக அமைந்து விடும். இன்றைய கொலை, கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு அடிப்படை காரணமே இந்த மாதிரியான விஷயங்கள்தான்.

திருமணமாகி கணவர் வீட்டுக்கு செல்லும் பெண், அங்குள்ள கணவரின் உறவினர்கள் மற்றும் சுற்றத்தாரையும் ஏற்றுக் கொண்டு அன்பு, மரியாதை செலுத்த வேண்டும்.

வெவ்வேறு இடங்களில் இருந்த ஆணும், பெண்ணும் இணையும்போது பல்வேறு விஷயங்களில் முரண்பாடுகள் ஏற்படவே செய்யும். அதை சரி செய்து ஒத்துப் போவது நல்லது.

வாழ்க்கை என்றால் நிறைய நெருக்கடி இருக்கத்தான் செய்யும். ஆனால் அதையெல்லாம் சகஜமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். உங்களுடைய துணைவரிடம் நல்ல குணங்கள் இருக்கும்போது அதை கண்டுகொள்ளாமல், குறைபாடுகளை மட்டும் பெரிதாக்குவதை தவிர்க்க வேண்டும். இருவரது குறைபாடுகளையும் பரஸ்பரம் ஏற்றுக் கொண்டு அதற்கு நல்லதோர் தீர்வு காணலாம்.

மது, போதை மருந்து, புகையிலை, பான்பராக் போன்ற லாகிரி வஸ்துக்கள் எல்லாமே குடும்ப வாழ்க்கையை சிதைக்கும் தன்மை கொண்டவை. சுகத்தை விட இதில் சோகமே அதிகம்.

அதேபோல், வரவுக்கேற்றபடி செலவு செய்ய இருவரும் முன்வர வேண்டும். செலவுகளை கட்டுப்படுத்தவும் முயற்சிக்கவும். மாதந்தோறும் பட்ஜெட் தயார் செய்து தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது.

பெரும்பாலான குடும்பங்களில் பிரச்சினைகள் உருவாக பெரியவர்களும் முக்கிய காரணம்.

சுதந்திரமாக இருக்கும் இன்றைய தலைமுறையை… பெரியவர்கள் சிலர் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கட்டுப்படுத்த நினைப்பதை தவிர்க்க வேண்டும்.

பெற்றோர் மற்றும் உறவினர்கள் குதர்க்கமான பேச்சு மூலம் தம்பதிகளுக்குள் பிரச்சினைகளை உருவாக்கக் கூடாது.

சந்தேகம், முன் கோபம், மது அருந்துதல் போன்றவை பிரச்சினை என்ற தீயில் மேலும் எண்ணையை ஊற்றுவது போல் ஆகிவிடும். இதற்கு கவுன்சிலிங் சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

எந்த செயலாக இருந்தாலும் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேசி, அதை செயல்படுத்தினால் பிரச்சினை ஏற்படாது. அதேமாதிரி, எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அனைவரும் அமர்ந்து பேசினால் பிரச்சினையை சமாளிக்க முடியும்.

உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்போது காட்டும் விசேஷ அக்கறை, தம்பதிகளுக்குள் ஒரு நல்ல இணக்கமான சூழ்நிலையை எற்படுத்தும்.

திருமணம் செய்துவிட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோர், தங்களுடைய மனநிலையை மேம்படுத்துவது நல்லது. வெளிநாட்டில் இருக்கும் போது தன்னுடைய மனைவியை யாராவது தவறாக சொன்னால் அதை நம்பி, தன்னுடைய வாழ்க்கையை பலி கொடுக்கத் துணிவது நல்லதல்ல.

இப்போது 65 சதவீதம் பேர் செக்ஸ் விஷயத்தில் முழுமையானவர்களாக இல்லை. இதனால் ஏற்படும் தவறான கருத்துகளும் குடும்ப வாழ்க்கைக்கு உலை வைத்துவிடும். எனவே குடும்ப வாழ்க்கையை தொடங்கும்போது, செக்ஸ் குறித்த முழுமையான அறிவு அவசியம்.

முக்கியமாக… குடும்பத்தில் தம்பதிகளுக்குள் ஏதாவது பிரச்சினை என்றால் அதை இருவருமாக பேசி முடிக்க வேண்டும். அதைவிடுத்து மூன்றாவது மனிதரை இந்த விஷயத்துக்குள் நுழைய அனுமதிக்க வேண்டாம். அதேபோல், திருமணத்திற்கு பிறகு மனைவியை கவனிக்கும் பொறுப்பை பெற்றோரிடம் ஒப்படைப்பதும் தவறு. இதனால் பிரச்சினைகள்தான் தோன்றும். தம்பதிகளில் யாராவது ஒருவருக்கு பிரச்சினை என்றால் அதை கனிவான அணுகுமுறை மூலம் முடிவுக்கு கொண்டு வந்து விடலாம். இந்த நேரங்களில் பொறுமையான மனநிலையும் முக்கியம்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India