இரு முகங்கள், மூன்று கண்களுடன் உயிர் வாழும் அதிசயப் பூனை...
இரு முகங்கள், இரு வாய்கள், மூன்று கண்கள் கொண்ட பூனையைப் பார்த்திருக்கிறீர்களா? இதுபோன்ற அதிசயப் பிறவிகள் பிறப்பது சகஜம் தான் என்றாலும் அவை நீண்ட காலம் உயிருடன் இருப்பது பேரதிசயம் அல்லவா? அப்படி ஒரு பூனை அமெரிக்காவில், 12 ஆண்டுகளாக நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.
அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில், நார்த் கிராப்டனில் இயங்கி வரும் கால்நடை மருத்துவக் கல்லூரி ஒன்றில், பணியாற்றி வருகிறார் மார்ட்டி ஸ்டீவன்ஸ் என்ற பெண். 12 ஆண்டுகளுக்கு முன், ஒருவர் இரு முகங்கள் உள்ள, பூனைக் குட்டி ஒன்றைக் கொண்டு வந்தார். அந்தப் பூனை பிறந்து, ஒரு நாள் தான் ஆகியிருந்தது. ஆனால், அதற்கு இரு முகங்கள், இரு வாய்கள், இரு மூக்குகள் மற்றும் மூன்று கண்கள் இருந்தன. அதிசயப் பிறவியான இது உயிர் பிழைக்குமோ பிழைக்காதோ என்ற சந்தேகத்தில் கால்நடைக் கல்லூரியில் விட்டு விடலாம் என்ற முடிவோடுதான், அந்த நபர் பூனையைக் கொண்டு வந்திருந்தார்.
தற்செயலாக பூனையைப் பார்த்த ஸ்டீவன்ஸ், தான் அதை வாங்கி வளர்க்க ஆசைப்படுவதாகத் தெரிவித்தார். வந்த நபரும், பூனையை ஸ்டீவன்சிடம் கொடுத்துவிட்டுச் சென்றார். அதன்பின் ஸ்டீவன்சிடம் தான் அந்த பூனை வளர்ந்தது. கடந்த, 12 ஆண்டுகளாக எவ்வித நோயும் பாதிப்பும் இல்லாமல் திடகாத்திரமாக உள்ள அந்தப் பூனைக்கு "பிராங்க் அண்டு லூயி' என்று ஸ்டீவன்ஸ் பெயரிட்டுள்ளார்.
பொதுவாக இதுபோன்ற அதிசயப் பிறவிகள், கொஞ்ச நாள் மட்டுமே உயிர் வாழும். சுவாசிப்பதில், உண்பதில், செரிமானம் ஆவதில், பல பிரச்னைகள் அடுத்தடுத்து தோன்றி, அவற்றின் உயிர்களை காவு கொண்டு விடும். ஆனால், அதிசயத்திலும் அதிசயமாக, பிராங்க் அண்டு லூயி கடந்த, 12 ஆண்டுகளாக, திடகாத்திரமாக வாழ்ந்து வருகிறது. இரு வாய்கள், இருந்தாலும் ஒரு வாய் வழியாகவே உண்கிறது. மூன்று கண்கள் இருந்தாலும் இரண்டின் வழியாகத் தான் பார்க்கிறது. "ஆரம்பத்தில் இதற்கு உணவு ஊட்ட மிகச் சிரமப்பட்டேன். ஒவ்வொரு நாளும், இது உயிருடன் இருப்பதற்காக கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன். நீண்ட வாழ்நாளையும் லூயி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என, நான் ஆசைப்படுகிறேன்' என்று பாசத்துடன் சொல்கிறார் ஸ்டீவன்ஸ். கடந்த, 12 ஆண்டுகளாக எவ்வித பாதிப்பும் இல்லாமல், லூயி வாழ்ந்து வருவதால், அடுத்தாண்டுக்கான கின்னஸ் சாதனைப் புத்தகத்தில், இடம் பெறப் போகிறது.


Paris Time



0 comments:
Post a Comment