'வாழநினைத்தால் வாழலாம்" இரட்டையர்கள் பெருமிதம்
உலகில் சாதிக்க முடியாத எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன. ஒரு சிலர் தமது உடம்பைக் குறை கூறிக்கொண்டு காலத்தைக் கடத்துவார்கள். அந்தவகையில், டாக்டர்களின் ஊகங்களை முறியடித்து, தலை ஒட்டிப் பிறந்த, ஆண், பெண் இரட்டையர்கள் தங்கள், 50ஆவது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடியுள்ளார்கள்.
ஜோர்ஜ் மற்றும் லோரி சேப்பல் என்ற ஆண், பெண் குழந்தைகள் இருவரும், 50 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் பிறந்தனர். பிறக்கும் போதே, இருவரது தலையும் ஒட்டி இருந்துள்ளது. அதோடு தலையின் முக்கிய நரம்புகளும், மூளையில், 30 சதவீதமும் இருவருக்கும் பொதுவாக இருந்தன.
மருத்துவ வசதிகள் அதிகமாக முன்னேற்றமில்லாத அக்காலத்தில், இந்த விசித்திரமான பிறவிகள், நீண்ட நாள் வாழ முடியாது என, டாக்டர்கள் கைவிரித்து விட்டனர். அவ்வாறு கைவிரிக்கப்பட்டாலும் இவ்விருவரும் அண்மையில் 50 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.
வாழ நினைத்தால் வாழலாம் என்ற பழமொழிக்கு இலக்கணமாக இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். தங்களது வாழ்க்கை குறித்து, 'டெய்லி மெயில்" பத்திரிகைக்கு லோரி அளித்த பேட்டி ஒன்றில 'நாங்கள் பிறந்த போது, எங்களது வாழ்க்கை மிஞ்சிப் போனால், 30 ஆண்டுகளைத் தாண்டாது என்று கூறினர். ஆனால், அவர்களின் ஊகங்கள் தவறு என்று, நாங்கள் நிரூபித்து விட்டோம். கடந்த 50 ஆண்டுக்கால வாழ்க்கையில் நாங்கள் நிறையக் கற்றுக் கொண்டோம். எங்கள் வாழ்க்கையை முழுதாக வாழ்ந்து முடிப்போம்" என்று பெருமிதத்துடன் கூறினர்.
0 comments:
Post a Comment